“முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” - கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
முல்லைப் பெரியாறு அணை பரமரிப்பு, நீர் தேக்கம் அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில்,
“முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள், புனரமைப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் என அனைத்தையும் மேற்கொண்டாலும் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை. அனைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பின்னர் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க உரிமை உள்ளது. அணையை பலப்படுத்துவது என்பது உச்சபட்சமாக 142 அடி நீரை தேக்குவதற்கு மட்டுமே.
வல்லக்கடவு - முல்லை பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனெனில் அந்த சாலை அடிக்கடி மழையாலும், ஆற்று நீர் பெருக்காலும் பாதிப்படையும், அதேபோல அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அந்த சாலை செப்பனிட அனுமதிக்க முடியாது. மேலும் ஏற்கனவே உள்ள சாலையே அணை பராமரிப்பு பணிக்கான உபகரணங்களை எடுத்து செல்வதற்கு போதுமானது.
தற்போதைய முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், கேரளா மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும். எனவே முல்லைப்பெரியாறில் புது அணை கட்டுவது தொடர்பான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அந்த அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசு ஏற்கும்.
அணை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவை கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு, 07.05.2014 தேதியிட்ட தீர்ப்பு மற்றும் ஆணையின் மூலம் நீடித்து நிலைத்துள்ளது.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 21.11.2024 தேதியிட்ட
அலுவலக குறிப்பாணை மூலம் ஏற்கனவே இருந்த முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்பார்வைக் குழுவை கலைப்பதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. அது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரங்கள் இல்லை என்பதால், கடந்த 21.11.2024 தேதியிட்ட மத்திய அரசின் அறிவிப்பாணை தீர்ப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.