முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்: ஜாம்நகரில் குவிந்த பிரபலங்கள்!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் முன் திருமண வைபவங்களில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்நாட்டு பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில், மார்ச் மாதம், முதல் 3 தினங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி, தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் 1000 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லரை வர்த்தகம், ஜியோ தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் எரிசக்திப் பிரிவு ஆகியவற்றை கவனித்து வரும் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்செண்டின் மகளான ராதிகா மெர்செண்டை கரம் பிடிக்க உள்ளார். 2023-ம் ஆண்டு ஜனவரி மாதமே இவர்களின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், ஜாம்நகரில் துவங்கியுள்ள முன் திருமண வைபவங்கள், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் அத்திசைக்கு திருப்பியுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி முதலே விழாக்கோலம் பூண்ட ஜாம்நகரில், அம்பானி குடும்ப உறுப்பினர்களால் அங்குள்ள ஜோக்வாட் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவுகள் விருந்தளிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் உள்ளிட்டோர் உணவு பரிமாறிய காட்சிகள் சமூக வலைதளங்களிலும் உலா வந்தன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர். குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சி.இ.ஓ பாப் இகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து ஜாம்நகருக்கு விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல விருந்தினர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எந்த நிற ஆடையில் வரவேண்டும் என்பதற்கான விளக்க புத்தகமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.