“முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும்” - சிவசேனா எம்பி நரேஷ் மாஸ்கே!
மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று சிவசேனா எம்பி மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இதுகுறித்து பேசிய சிவசேனா உறுப்பினர் நரேஷ் மாஸ்கே,
“இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் (ASI) பாதுகாக்கப்பட்டுள்ள 3,691 நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்லறைகளில், 25 சதவீதம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு எதிராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் மற்றும் முகலாய அதிகாரிகளுக்கு உரியது.
ஔரங்கசீப் சத்ரபதி சாம்பாஜியைக் கொன்று, இந்து கோயில்களை அழித்து, சூறையாடியவர். ஒன்பதாவது மற்றும் பத்தாவது சீக்கிய குருக்களைக் கொன்ற ஔரங்கசீப், குல்தாபாத்தில் உள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ASI ஆல் பாதுகாக்கப்படுகிறது.
ஔரங்கசீப் போன்ற கொடூரமான ஒருவரின் நினைவுச்சின்னத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? ஔரங்கசீப் மற்றும் இந்தியாவுக்கு எதிராக செயலாற்றிய அனைவரின் நினைவுச்சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும்” என்று தானே நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினர் மாஸ்கே கூறினார்.
சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் 'சாவா' திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள பேரரசர் ஔவுரங்கசீபின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.