"திரு.மாணிக்கம் படத்தை பார்த்து கண்கலங்கி விட்டேன்" - இயக்குநர் #Ameer பேச்சு
திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இரு காட்சியில் கண்கலங்கி விட்டதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் திரு. மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் டிச.27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்.
அப்போது இயக்குநர் அமீர் பேசியதாவது,
"எனக்கு இயக்குநர் நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும். அவரது 'ஒரு கல்லூரியின் கதை' படம் வருவதற்கு முன்னதாகவே அந்தப்படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. நந்தா ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாக செய்துகொண்டே இருப்பார். 'மாத்தி யோசி' என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். நடிகர் சமுத்திரகனியிடமும் இதைப் பார்த்துள்ளேன். இந்த படம் பார்த்து இரு காட்சியில் கண்கலங்கி விட்டேன்.
படம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம், அதை இப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பாக இப்படம் உள்ளது. இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை கற்றுத்தருவது தான் இந்தப்படம். நடிகர்கள் கமலஹாசன், சிவாஜி ஆகியோரை எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி.
இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இயக்குநர் பாராதிராஜா இப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. இயக்குநர் நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சமுத்திரகனியின் கதாப்பாத்திரத்தை இவரைவிட யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவர் தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள்"
இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்தார்.