#MPox | குரங்கம்மை தொடர்பான அவசர நிலை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
குரங்கம்மை தொடர்பான WHO இன் அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச பொது சுகாதார அவசரநிலை (PHEIC) குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் இது மனிதர்களிடையே பரவும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும்.
இந்தியாவை பொறுத்தவரை சீரம் நிறுவனம் இதற்கான வேக்சினை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும் டெல்லியில் 3 மருத்துவமனைகள் குரங்கு அம்மை பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்திருந்த நிலையில் அதன் மூலம் இந்த தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை குறித்த பொது சுகாதார அவசர நிலை குறித்து உலக சுகாதார மையம் அளித்த தகவலின் அடிப்படையில், அறிக்கை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், Mpox தொடர்பான சர்வதேச அக்கறைக்கான பொது சுகாதார அவசரநிலை (PHEIC) WHO இன் அறிவிப்பைக் கருத்தில் கொண்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.