“கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோ சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை சிதைத்துள்ளது” - சசி தரூர் எம்.பி. குற்றச்சாட்டு
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.
இத்தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பை மற்ற அணிகள் ஏற்கனவே தெரிவித்திருக்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதில், இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்) , சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இதே வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் பும்ராவின் உடல்நிலை கருதி அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணி வீரர்களுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து சஞ்சு சாம்சனின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரேவில் 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு விளையாடி 56.66 சராசரியை வைத்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார். கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோ சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை முற்றிலுமாக சிதைத்துள்ளது”
இவ்வாறு சசி தரூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.