தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி எம்.பி!
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை விருப்பமனு அளிக்கவுள்ளார்.
மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப். 19 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேலும் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப். 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விருப்ப மனு சமர்பிக்கும் பணி மார்ச் 1 ஆம் தேதி முதல் துவங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 50 பேர் கனிமொழி எம்.பி பெயரில் விருப்ப மனு சமர்பித்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கனிமொழி பெயரில் விருப்ப மனுவை சமர்பித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நாளை காலை விருப்ப மனுவை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.