தமிழ் ஆசிரியர்கள் நிலைமை குறித்து எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!
தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லாதது குறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நாடாளுமன்றத்தில் முக்கியக் கேள்விகளை எழுப்பினார்.
அவர் தனது கேள்வியில், "கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் பணியில் உள்ள நிலையில், தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் இருப்பது மொழி சமத்துவத்தையும், தமிழ் மாணவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது தமிழ் மொழி மீது காட்டப்படும் பாகுபாடு என்றும், மாணவர்களின் தாய்மொழிக் கல்வி பெறும் உரிமையை மறுப்பதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி இந்தப் பள்ளிகளில் நிரந்தரத் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இது அவர்களின் கலாச்சார மற்றும் மொழி அறிவை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதாக அமைகிறது. இந்தக் கேள்வி, மத்திய அரசின் கல்விக்கொள்கையிலும், கேந்திர வித்யாலயா பள்ளிகளின் நிர்வாகத்திலும் மொழி சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நிரந்தரத் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது.