எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார்.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிர்லா பரிந்துரைத்தார். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.
தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது. அந்த அறிக்கையை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 8) தாக்கல் செய்தார். அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நிவாரணம் பெறலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான கே.சி.கௌசிக், “அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு தனிநபருக்கு உரிமை உண்டு என்று பிரிவு 32 கூறுகிறது. எனவே, மஹுவா மொய்த்ரா மேல்முறையீடு செய்வதற்குப் பதிலாக, தீர்வுக்காக உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம்” என்று கூறினார்.
தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா 11-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எம்.பி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் டிசம்பர் 15-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என இன்று உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய மனுவை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரிக்க இன்று (டிசம்பர் 13) அல்லது நாளை (டிசம்பர்-14) ஆகிய தேதிகளில் பட்டியலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, மின்னஞ்சல் மூலமாக உடனடியாக முறையீடு செய்யுமாறும், தான் அதுகுறித்து உடனடியாக முடிவெடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தரப்புக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, மஹுவா மொய்த்ராவில் மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.