ம.பி., சத்தீஸ்கரில் புதிய முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு..!
பாஜக வெற்றி பெற்ற மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் புதிய முதலமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ZPM கட்சியும் வெற்றி பெற்றன.
தெலங்கானா முதலமைச்சராக காங். தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கடந்த 07-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அந்த விழாவில் காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனிடையே சத்தீஸ்கரில் முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி..!
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி இருந்து வந்த நிலையில், இறுதியாக பஜன்லால் சர்மா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ம.பி., சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.