இந்த வாரம் ரிலீசான படங்கள் .... இதோ மினி விமர்சனம்!
இந்த வாரம் (ஜூலை 25) பன்பட்டர்ஜாம், கெவி, ஜென்மநட்சத்திரம், டிரெண்டிங், யாதும் அறியான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வீக் எண்ட்டில் எந்த படம் பார்க்கலாம். எதை ரசிக்கலாம். எதை தவிர்க்கலாம். இதோ மினி விமர்சனம்.
”பன்பட்டர்ஜாம்”
காலேஜ், காதல், காமெடி பேக்கிரவுண்டில் கலகலப்பான என கலர்புல் படமாக வந்து இருக்கிறது பன்பட்டர்ஜாம் திரைப்படம். பிக்பாஸ் வின்னர் ராஜூ, பாவ்யா, ஆதியா, பப்பு, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்க, ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கி உள்ளார். இன்ஜினியரிங் காலேஜில் படிக்கும் ராஜூ தனது கிளாஸ்மேட் பாவ்யாவை காதலிக்கிறார். ஆனால், அவர் அம்மா சரண்யாவோ பக்கத்து வீட்டில் இருக்கும் ஆதியாவை ராஜூக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆதியாவோ பப்புவை லவ் பண்ணுகிறார், ராஜூவின் உயிர் நண்பனான மைக்கேல், ராஜூ காதலியான பாவ்யாவை ஒரு தலையாக காதலிக்கிறார். இப்படிப்பட்ட ரிலேசன்ஷிப் எங்கே போய் முடிக்கிறது. என்னென்ன சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் எந்த காதல் ஜெயித்தது. யார் ஒன்று சேர்ந்தார்கள் என்பதே படத்தின் கிளைமாக்ஸ். காலேஜ் சம்பந்தப்பட்ட படம் என்பதாலும் காதல் கதை என்பதாலும் சீன்கள் வெகமாக நகர்கின்றன. ராஜூவின் நடிப்பு, ஹீரோயின்களின் அழகு, சரண்யா, தேவதர்ஷினி காமெடிசீன்கள் படத்துக்கு பிளஸ். குறிப்பாக, அந்த பீட்சா சீன், ஹீட்டர் சீன், வாட்டர் கேன் சீனில் சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. பப்பு சம்பந்தப்பட்ட சீன்கள் செம கலகலப்பு. லவ்வர், பிரண்ட், பெஸ்டி. இவர்கள் யார்? இவர்கள் எல்லை எதுவரை என்ற கேள்விகளுக்கு, இன்றைய இளம் தலைமுறை பார்வையில் பதில் சொல்கிறது கதை. விக்ராந்த் கவுரவ வேடத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். இன்றைய காதல், நட்பு இப்படிதான் என்று சொல்லாமல் சொல்லி, கமர்ஷியலாக ஒரு படத்தை கொடுத்து பெயர் வாங்குகிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். குறிப்பாக, கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. அதில் ஆதியா கியூட்டான நடிப்பு நச். நிவாஸ் கே பிரசன்னா இசையும், பாடல்களும் படத்தை இன்னும் அழகாக்குகின்றன. இந்த வாரம் வந்திருக்கும் படங்களில் பன்பட்டர்ஜாம் படத்துக்கே நம்பர் 1 இடம். இளைஞர்கள் படத்தை கொண்டாடுவார்கள், மற்றவர்களோ அட, நமக்கு இந்த மாதிரி லைப் அமைந்தது இல்லையே என்று பொறமைபடுவார்கள்.
”பன்பட்டர்ஜாம்” தலைப்பை போலவே படமும் ஸ்வீடாக இனிக்கிறது.
”கெவி”
ஒரு இரவு நேரத்தில் கொடைக்கானல் அருகே இருக்கும் ஒரு மலை கிராமத்தில், கர்ப்பிணியான ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறார். அங்கே ஆஸ்பிட்டல் கிடையாது. பல கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கும் ஆஸ்பிட்டலுக்கு டோலி கட்டி அவரை துாக்கி செல்கிறார்கள் ஊர் மக்கள். அந்த சமயத்தில் ஒரு பிரச்னை காரணமாக அவர் கணவர் ஆதவனை கொல்ல துரத்துகிறது போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வினோத் தலைமையிலான டீம். ஷீலாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததா? ஆதவன் உயிர் பிழைத்தாரா என்பதுதான் கெவி படத்தின்ம் மீதிக்கதை. அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், இன்னமும் சரிவர சாலை, மருத்துவவசதி கிடைக்காத மலை கிராமங்கள், அங்கும் வசிக்கும் மக்கள், அவர்களை கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் குறித்து கதை தெளிவாக பேசுகிறது. கர்ப்பிணியாக நடிக்கும் ஷீலா நடிப்பும், போலீசிடம் சிக்கிய ஆதவன் கதறலும் படத்தை அழுத்தமாக்குகின்றன. இவர்களுக்கு உதவும் ஊர் மக்கள், நல்ல டாக்டரான விஜய் டிவி ஜாக்குலின், அவர் உதவியாளர் ஜீவா ஆகியோர் நடிப்பும் மனதில் நிற்கிறது. தேர்தல் சமயத்தில் மட்டும் இந்த மக்களை பார்க்க வரும் அரசியல்வாதிகள், ஓட்டு பதிவுக்காக வரும் அரசு ஊழியர்கள், வெள்ளக்காரன் காலத்தில் இருந்தே , வசதிகள் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் என பல விஷயங்களை நேர்த்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமான படமாக இல்லாமல் ஒரு விழிப்புணர்வு படமாகவும், சமூக அக்கறை கதையாகவும் எடுத்த படக்குழுவை பாராட்டலாம். சம்பந்தப்பட்ட பகுதிக்கே சென்று இரவில் முக்கியமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யாவுக்கு ஒரு பொக்கே .
மொத்தத்தில் ஒரு மலைகிராமத்தின் கதறலே இந்த ”கெவி”
”டிரெண்டிங்”
யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு சம்பாதிக்கிறார்கள் கலையரசன், பிரியாலயா ஜோடி. சில சிக்கல்கள் காரணமாக அந்த வருமானம் நின்றுவிட, வீடு இஎம்ஐ கட்ட முடியாமலும் பணத்தேவையை சமாளிக்க முடியாமலலும் திணறுகிறார்கள். அப்போது வரும் ஒரு போன் காலின் குரல் ‘நீங்க வீட்டில் இருந்தே ஒரு டாஸ்க் விளையாடலாம். 7 நாட்களில் 2 கோடிவரை பணம் சம்பாதிக்கலாம்’என அவர்களுக்கு ஆசை காண்பிக்கிறது. வேறு வழியின்றி வீட்டுக்குள் கணவன், மனைவி ஒரு கேம் விளையாடுகிறார்கள், ஏகப்பட்ட டாஸ்க் கொடுக்கிறது அந்த குரல். ஒரு கட்டத்தில் அந்த டாஸ்க் காரணமாக கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்படுகிறது. இதன்பின் அடுத்தடுது என்ன நடந்தது என்பதே ஜென்ம நட்சத்திரம் கதை. சிவராஜ். என் இப்படத்தை இயக்கி உள்ளார். சோஷீியல் மீடியாவால் வரும் மன,பண பிரச்னைகள், வீடியோவை வைரல் ஆக்க வேண்டும் என்ற பெயரில் சிலர் சிக்கும் விஷயங்கள் பின்னணியில் கதை நடந்தாலும், பெரும்பாலான சீன்களில் கலையரசன், பிரியாலயா மட்டுமே நடிப்பதும், டாஸ்க் சம்பந்தப்பட்ட சீன்களில் அழுத்தம் இல்லாததும் போரடிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முந்திய காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. நல்ல கான்சென்ட் ஆக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் படம் தடுமாறுகிறது.
வியூஸ் அதிகரிக்காத வீடியோக்களால் ”டிரெண்டிங்” ட்ரெண்டிங் ஆக முடியாமல் தவிக்கிறது.
”ஜென்ம நட்சத்திரம்”
ஒரு பாழடைந்த பில்டிங்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுக்க, சினிமா உதவி இயக்குனரான தமன், தனது மனைவி மற்றும் நண்பர்கள் 3 பேருடன் அங்கு செல்கிறார். ஆனால் அங்கே பேய் இருப்பதாக சென்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள். இதனிடையே தமனின் நண்பர்களில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது பேயா? அந்த பணத்தை கடைசியில் அவர்கள் கைப்பற்றினார்களா என்பதே படத்தின் கிளைமாக்ஸ். ஒரு நொடி என்ற படத்தை இயக்கிய பி. மணிவர்மனே இப்படத்தையும் இயக்கி உள்ளார். பெரும்பாலான கதை பணத்தை தேடுவது, தப்பி ஓடுவது, கொல்லப்படுவது என்றே நகர்கிறது. திரில்லர் கதைக்குபின் அமானுஷ்யத்தை சேர்த்து இருக்கிறார்கள். ஆனாலும், ஒரு கட்டத்தில் அது குழப்பமாக இருக்கிறது. அரசியல்வாதியாக வேல.ராமமூர்த்தி, பணத்தை திருடுபவராக காளிவெங்கட், டாக்டராக தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். தமன் மற்றும் அவரது மனைவியாக நடித்த மால்வியின் நடிப்பு மட்டும் ஓகே. வில்லத்தனத்துக்கு மாறும் அந்த நண்பர் மட்டுமே மனதில் நிற்கிறார், மற்றபடி, பல காட்சிகளில் பின்னணி சரியாக சொல்லப்படவில்லை. லுாசிபர், நாய், குழந்தை, தாய் என ஏதோதோ குறீடுகளுடன் பல விஷயங்கள் சொல்லபட்டாலும், அது கதையுடன் ஒட்டவில்லை.
குழப்பான திரைக்கதையால் ஜொலிக்க மறுக்கிறது இந்த ”ஜென்மநட்சத்திரம்”
சிறப்பு ஆசிரியர் : மினாட்சி சுந்தரம்