திரைப்படமாகும் திருக்குறள் - A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!
காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய படங்களை இயக்கிய ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திருக்குறளை திரைப்படமாக இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது:
”ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.
தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கவுள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை என்றாலும், ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு தான், தமிழன், தமிழ் பண்பாட்டின், தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் அண்ணாந்து பார்த்தது. தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷ்ய எழுத்தாளர் ‘டால்ஸ்டாய்’ ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது.
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.” என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானிக்கப்பட்டது. பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும், இசையைப் போல, ஓவியத்தைப் போல. திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம்.
இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது. அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.
ஒரு படைப்பின் வழியே படைப்பாளியை அறிந்து கொள்ள முடியும். ஒரு குறளை காட்சியமைக்க முயலும் போது, அதனூடாக திருவள்ளுவரும், ரத்தமும், சதையுமாக உயிர்த்தெழுந்து வருகிறார். அவ்வகையில் திரைக்கதை முழுவதும் திருவள்ளுவரும் நிறைந்துள்ளார். ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என தீட்சண்யமான கண்களோடு, அறச் சீற்றம் கொள்ளும் வள்ளுவர், “அனிச்சமும் அன்னத்தின் தூவியும்’ என மென்மையான காதலனாக கனிந்தும் நிற்கிறார்.
திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.
அதோடு அன்றைய மெய்யியல், அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். ‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே! திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.
இத்திரைப்படத்திற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்க, வரும் தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று இத்திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெறுகிறது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.