For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்" - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

06:32 PM Jul 27, 2024 IST | Web Editor
 நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்    உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ்
மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசின் நிர்பயா நிதியை
முழுமையாகப் பெற்று பயன்படுத்துவதற்கு ஏதுவாக உயர் மட்ட அதிகாரம்
அளிக்கப்பட்ட குழுவை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  இந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில் நிர்பயா நிதி மூலம் தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் பெண்கள் ஆதரவு பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையில் புதிதாக 13 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு
திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட
திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ்
மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து
நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக அறிக்கையில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Tags :
Advertisement