வாகன ஓட்டிகள் கவலை - விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் புதிய கட்டண உயர்வு!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 முதல் புதிய சுங்கச்சாவடி கட்டணங்கள் அமலுக்கு வரவுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள், டிரக், பேருந்து மற்றும் பல அச்சு வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும்.
இந்த கட்டண உயர்வு, விக்கிரவாண்டி வழியாகப் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டண விவரங்கள்;
- கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ₹105-ல் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பல முறை பயணிக்க ₹160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ₹3,170 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ₹185, பல முறை பயணிக்க ₹275, மற்றும் மாதாந்திரக் கட்டணம் ₹5,545.
- டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ₹370, பல முறை பயணத்திற்கு ₹545, மற்றும் மாதாந்திரக் கட்டணம் ₹11,085.
- பல அச்சு வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ₹595, பல முறை பயணிக்க ₹890, மற்றும் மாதாந்திரக் கட்டணம் ₹17,820.
இந்தக் கட்டண உயர்வு, ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிகரிப்பது அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.