சாதிப் பெயரைக் கூறி திட்டி, கொலை முயற்சி - தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது தாய் தமிழ்ச்செல்வியின் வீட்டின் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த மொக்க பிள்ளை மற்றும் சேதுபதி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மொக்க பிள்ளையின் வீட்டிலிருந்து
வெளியேறும் கழிவு நீர் தமிழ்ச்செல்வியின் வீட்டினருகே தேங்கி நின்றதால்
ஏற்பட்ட தகராறில், விஜய் மற்றும் அவரது தாய் தமிழ்ச்செல்வி சாதிப் பெயரைச்
சொல்லி அவதூறாக பேசி, மொக்க பிள்ளை மற்றும் அவரது மகன் சேதுபதியை அறிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மொக்கப் பிள்ளையின் மகன் சேதுபதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து க.விளக்கு காவல் நிலையத்தில் சேதுபதி மற்றும் அவரது
தாய் மொக்க பிள்ளை புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், விஜய் மற்றும் அவரது தாய்
தமிழ்ச்செல்வி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, கொலை முயற்சி மற்றும் எஸ்சி
எஸ்டி வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாய் மற்றும் மகனுக்கு ஆயுள்
தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 3000 ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட கால மெய் காவல் சிறை தண்டனையும் விதித்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் மற்றும் மகனை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.