ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு - புவி வெப்பமயமாதல் காரணமா..?
பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறை பள்ளத்தாக்கான க்ஜோஸில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உள்ளூர் பூச்சியியல் வல்லுநரான பிஜோர்ன் ஹ்ஜால்டசன் மேற்கொண்ட ஆய்வில் இரண்டு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொசுக்கள் குளிர்காலத்திலும் வெற்றிகரமாக உயிர்வாழக்கூடிய குலிசெட்டா அன்லுலாட்டா இனத்தை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நிலை பதிவானது. குறிப்பாக எக்லிஸ்டாடிர் விமான நிலையத்தில் வெப்பநிலை 26.6C (79.8F) ஐ எட்டியது. இது கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் பூமியில் கொசுக்கள் இல்லாத பகுதியாக நீண்ட காலமாக கொண்டாடப்பட்டு வந்த ஐஸ்லாந்து, அந்த தனித்துவத்தை இழந்துள்ளது.