மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல் | 143 பேர் பலி!... உக்ரைனை குறிவைத்த புடின்!... பின்னணியில் இருப்பது யார்?...
ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை நடந்த தீவிரவாத தாக்குதலால் உலகம் முழுவதும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் 'குரோகஸ் சிட்டி ஹால்' என்ற அரங்கம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு 'பிக்னிக்' என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஏற்பட்டிருந்தது. அரங்கத்தின் 7,500 இருக்கைகளும் ரசிகர்களால் நிரம்பி இருந்தன.
ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற தீவிரவாதிகளை, ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்கள் அதிதீவிரமாக தேடி உக்ரைன் எல்லை அருகே பிடித்தனர்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது: மாஸ்கோ தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்ச் 24-ம் தேதி ரஷ்யா முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் உதவி செய்த 7 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாஸ்கோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதலில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு, மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை குறிவைத்த புடின்:
மாஸ்கோ தாக்குதலில் உக்ரைனில் தொடர்புகள் இருந்ததாகவும், அவர்கள் உக்ரைன் எல்லைக்கு அருகே பிடிபட்டதாகவும் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புடின் பழியை எங்கள் பக்கம் திசைதிருப்ப முயல்கிறார் என்றார்.
மேலும், உக்ரைன் ராணுவ உளவுத்துறை செய்தி தொடர்பாளர் Andriy Yusov ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் நாடு ஈடுபடவில்லை. ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக நாடு தன்னைத் தானே பாதுகாத்து வருவதாகவும், அது பொதுமக்களுக்கு எதிராக அல்ல, ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் இராணுவத்திற்கு எதிராக மட்டுமே போராடுவதாகவும் அவர் கூறினார்.
ஐஎஸ்ஐஎஸ்:
இதனிடையே சிரியா, ஈராக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த மாஸ்கோ தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. அந்த அமைப்பின் டெலிகிராம் சமூக வலைதளம் மூலம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்கள், அந்த தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் எவ்வித பதிவும் வெளியாகவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.