மாஸ்கோ தாக்குதல்: யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர்? தாக்குதலின் பின்னணி என்ன?
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். யார் இந்த அமைப்பினர்? இவர்கள் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன?
மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று (மார்ச் 22) மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி சுடத்தொடங்கினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 93-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. போர்க்களம் போல் காட்சி அளித்த அப்பகுதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி, தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.
தாக்குதலில் வெளியான நெருப்பு மூலம் இசை அரங்கே கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உக்ரைன் போரின் நாட்டில் குறையாத நிலையில், இந்த தாக்குதல் நாட்டுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாஸ்கோ நகரின் மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர்?
இந்த தாக்குதல் நடந்ததுமே, உக்ரைனை நோக்கி சந்தேகங்கள் எழ, உக்ரைன் தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு வந்ததுடன், ரஷ்யர்களுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை என உக்ரைன் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இதனிடைய அமெரிக்க உளவு நிறுவனங்கள் மாஸ்கோ இசைக் கச்சேரி தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது.
சிரியாவை மையமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் அமைப்பின் பல்வேறு கிளை அமைப்புகள் உலகம் முழுமைக்கும் செயல்பட்டு வருகின்றன. மாஸ்கோ மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே என்பது ஐஎஸ் அமைப்பின், ஆப்கானிஸ்தான் கிளையாக செயல்பட்டு வருகிறது. ஐஎஸ்ஐஎஸ்-கே என்பதில் உள்ள கே, கோரசன் என்பதைக் குறிக்கிறது. இது ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய அகண்ட தேசத்தைக் குறிக்கும் ஆதிப்பெயராகும்.
சிரியாவில் ஐஎஸ் அமைப்பு சிதைக்கப்பட்டதும், அதிலிருந்து விலகிய சிலர் 2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பை நிறுவினர். இந்த அமைப்பினர் முதலில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை தொடங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானில் சுமார் 100 பேரைக் கொன்ற இரட்டை குண்டுவெடிப்பு, செப்டம்பர் 2022-ல் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு, 2021-ல் காபூல் சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் 13 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் ஏராளமான ஆப்கானிஸ்தானியர் பலியானது ஆகியவற்றின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்-கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
ரஷ்யாவுக்கு எதிரான திடீர் எதிர்ப்பு நிலையை ஐஎஸ்ஐஎஸ்-கே கொண்டுள்ளது. இதன் பின்னணியில் மேற்கு நாடுகள் இருக்கின்றனவா என்ற ஐயம் ரஷ்ய உளவுத்துறைக்கு உள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகவும், அதிபர் புதினுக்கு எதிராகவும் ஐஎஸ்ஐஎஸ்-கே தொடர்ந்து மிரட்டல்களை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் இஸ்லாமியர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும், புதின் அரசாங்கம் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் ஐஎஸ்ஐஎஸ்-கே குற்றம்சாட்டி வந்தது.
இந்த எதிர்ப்புணர்வை தெரிவிக்கும் வகையில் தான் மாஸ்கோ மீதான தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ்-கே தற்போது நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. எல்லைக்கு வெளியே உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு, அதன் எல்லைக்கு உள்ளாக பதற்ற நிலையை அதிகரிக்கச் செய்யும் சக்திகளின் தூண்டுதலும் ஐஎஸ்ஐஎஸ்-கே பின்னால் இருப்பதாக ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.