கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!
நெல்லை மாவட்டம், களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு, வீட்டு உபயோகப் பொருள்களும் நாசமாகியுள்ளன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவன் வடலி, கீரனூர், தண்ணீர் பந்தல், நரசன்விளை, சேர்ந்தபூமகளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் தனித்தீவுகளாக காட்சியளிக்கிறது. மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும் கூட தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்கள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவே கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் கடும் சிரமங்களுக்கிடையே படகுகளில் அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் கன மழையின் காரணமாக வீடு இடிந்து மின்சாரம் தாக்கி இந்த 12 பேர் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் தொடர் மழை வெள்ளத்தால் ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்து, பொருட்கள் நாசமடைந்தது தெரியவந்துள்ளது.