பிரபல உணவகத்திற்கு பூட்டுக்கு மேல் பூட்டு... ‘இஃப்தார் நோன்பு பேக்’ சாப்பிட்டோருக்கு நேர்ந்த சோகம்!
சென்னையில் மவுண்ட் ரோடு மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் பிலால் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் பிரியாணி உணவகத்தில் ரம்ஜானுக்கு முதல் நாளான மார்ச் 30ஆம் தேதியன்று “இப்தார் நோன்பு பேக்” சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியடைந்தவர்கள், தண்டையார்பேட்டை மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். இதனையடுத்து பிலால் பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் சோதனையின் போது பிலால் உணவக உரிமையாளர், நிர்வாகிகள் யாரும் இல்லாததோடு, செல்ஃபோனில் அழைத்த போதும் பதில் அளிக்கவில்லை. இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கடையின் கேட்டில் சீல் வைக்காமல் பூட்டின் மீது பூட்டு போட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
ஆனால், “போலீசாருடன் வந்து கடைக்கு பூட்டு போட்டுள்ளோம். எங்களுக்கு தெரியாமல் மீண்டும் கடையை திறக்க கூடாது. பூட்டை திறக்க வேண்டுமென்றால் எங்களின் அனுமதி தேவை. மக்கள் நலன் கருதி தற்காலிகமாக பூட்டு போட்டுள்ளோம். இந்த கடைகளில் இருக்கும் பொருட்கள் காணாமல் போகக் கூடாது என்று போலீசாருக்கு கடிதம் அளிக்கவுள்ளோம்.
காலை தகவல் வந்த உடனே இங்கு வந்துவிட்டோம். இந்த கடையை அவ்வளவு சீக்கிரமாக திறக்க விட மாட்டோம். சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். உணவு தொடர்பாக மக்கள் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.