துவங்கும் பருவமழை... சென்னைக்கு #RedAlert!
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சென்னை விரைகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் மிக அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 ஆம் தேதி , தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 - 16 ஆம் தேதிகளில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில், மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. இதைத் தவிர்த்து திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் விதம், 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.