‘குரங்கம்மையை கொரோனாவோடு ஒப்பிட முடியாது’ - உலக சுகாதார அமைப்பு!
குரங்கு அம்மை நோயை பழைய அல்லது புதிய திரிபு வகை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று இல்லை எனவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசியதாவது;
“நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும். நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது. குரங்கு அம்மை நோயை கொரோனாவோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இதனை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.