100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?
பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என்று அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் அமலாக்கத் துறை இயங்கி வருவதால் அத்துறையின் வருடாந்திர ஆய்வு அறிக்கை நிதியமைச்சகத்துடன் சேர்த்தே வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில், வருடாந்திர ஆய்வு அறிக்கையை ‘பண முறைகேடு வழக்கு விசாரணைகளை விரைந்து முடிப்பதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் முதல் முறையாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
அதில், ‘வழக்குகளை அமலாக்கத் துறையினர் விசாரிப்பதற்கான நடைமுறைகளை பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) தெளிவாக வகுத்திருந்தாலும், அதை நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் ஏற்படும் தாமதம் வழக்கின் விசாரணையை பாதிக்கிறது.
அமலாக்கத் துறையினர் பண முறைகேடுகளை விசாரிக்கும்போது ஏராளமான நிதிப் பரிமாற்ற ஆவண தரவுகளையும், வெளிநாட்டு பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அமலாக்கத் துறையின் விசாரணையிலும் தாமதமாகிறது.
நாடு முழுவதும் 100 சிறப்பு பணமுறைகேடு நீதிமன்றங்கள் இருந்தும் இந்த வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது. இந்த நீதிமன்றங்களின் வழக்கு விசாரணையின்போது இடையீட்டு மனுக்கள், ரிட் மனுக்கள், ஜாமின் மனுக்கள் என தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அந்த மனுக்கள் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களுக்கு செல்வதாலும் வழக்கின் விசாரணையில் தாமதமாகிறது.
2000 முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் அமலாக்கத் துறை 7,771 முதல் தகவல் அறிக்கைகளை (இசிஐஆர்) பதிவு செய்துள்ளது. அதில், வெறும் 1,739 வழக்குகளில் மட்டும் அரசுத் தரப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமலாக்கத் துறை தினத்தில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், 'அமலாக்கத் துறை வழக்குகளில் தண்டனைப் பெற்று தருவது 93 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும், இதனால் அந்த அமைப்பின் குற்றத்தை நிரூபிக்கும் சதவீதம் குறைவாக உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.