For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!

04:09 PM Aug 27, 2024 IST | Web Editor
கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’   amma தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்  mohanlal
Advertisement

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ - ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த அமைப்பே கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சினிமா துறையில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை 2019-ம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியானது. அதில் நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. நடிகைகள் மற்றும் பெண்களுக்காகத் தனியாக டாய்லெட் வசதியோ, உடை மாற்றும் வசதியோ இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் சினிமா துறை குறித்த அதிர்ச்சிகரமான சில தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

  • `சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா இருக்கிறது. இவர்கள், மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.
  • அந்த மாஃபியா குழு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்திருக்கிறது.
  • இந்த மாஃபியாவின் முன்வரிசையில் 10, 15 பேர்கொண்ட பவர் குரூப் இருக்கிறது.
  • தெரிந்தோ, தெரியாமலோ இந்த பவர் குரூப்புக்கு எதிராகப் பேசினாலோ, செயல்பட்டாலோ சினிமா துறையிலிருந்து அவர்களை விலக்கிவைக்கவும், அவர்களிடமிருந்து தொடர்ந்து தொல்லைகளைச் சந்திக்கவும் நேரிடும்.
  • படப்பிடிப்பு செட்டில், போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாகியிருக்கிறது.
  • போதையில்தான் பாலியல் அத்துமீறல்கள் அதிகம் நடந்திருக்கின்றன.
  • பெரும்பாலான நடிகர்கள் மது போதையில்தான் படபிடிப்பு தளத்துக்கு வருகிறார்கள்.
  • இவர்களில் பெரும்பாலானோர் மது மட்டுமல்லாமல் போதைப்பொருள்களையும் பயன்படுத்துகிறார்கள்” இது போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல்ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் நடந்தது 2019-ம் ஆண்டே ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஆதாரபூர்வமாகக் கிடைத்தும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

தொடர்ச்சியாக, இப்பிரச்னை பூதாகரமான நிலையில், நடிகர்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்கள் மலையாள நடிகர் சங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் சங்க பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் இன்று (27.08.2024) கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்று ஏற்கனவே பிரித்விராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த அம்மா சங்கத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கேரள திரையுலகில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement