சபரிமலையில் மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்ட மோகன்லால்!
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகன் லால் நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டுகளுடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாக
இருக்கும் எம்புரான் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் வெற்றிப் பெறுவதற்காக சாமி தரிசனம் செய்தார் என பேசப்பட்டது.
ஆனால் நடிகர் மோகன்லால் தனது மனைவி சுசித்ரா மற்றும் நடிகரும், நண்பருமான மம்மூட்டி (முகமது குட்டி) பெயரில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தார். ஏற்கனவே நடிகர் மம்முட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் மோகன்லால் அவர் பெயரில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்த சம்பவம் கேரளாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
மோகன்லால் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளார். அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு அவரது பிரபலமான சூப்பர் ஹிட் படமான 'புலிமுருகன்' வெளியானபோது கோயிலுக்குச் சென்றார்.