தலைவர் 171-ல் கைகோர்க்கும் விஜய் சேதுபதி, மோகன்? - வெளியான புதிய தகவல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தில் நடிகர்கள் மோகன், விஜய் சேதுபதி ஆகியோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் 171-வது படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்.22ஆம் தேதி படத்தின் பெயர், டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது குறிப்பிடதக்கது.