ஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமனம்!
ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர். அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பயணம் மேற்கொண்ட பல அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஈரானின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்த முகமது மொக்பர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் ஆயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார். மேலும், இப்ராஹிம் ரைசி மறைவுக்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அலி காமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரசியலமைப்பு பிரிவு 131ன்படி நாட்டின் அதிபர் உயிரிழந்தால், துணை அதிபர் அப்பதவியை ஏற்பார். மேலும் 50 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.