நாளை மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து நாளை பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் மோடி பதவி ஏற்க உரிமை கோரியுள்ளார்.
மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார். கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இம்முறை பெறவில்லை. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இது மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு, ராஷ்டிரபதி பவனில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்
- டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்து விருந்தினர்கள் தங்கும் ஓட்டல்களை சுற்றி பாதுகாப்பு போடப்படுகிறது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.
- இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ராஷ்டிரபதி பவனில் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பு ஆய்வு நடத்தினர்.
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த உலகத் தலைவர்களில் ஒரு சிலரான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் புதுடெல்லிக்கு வருகை தரும் போது தங்குவதற்கு நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
- கூடுதலாக, டெல்லியின் NCT பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- பதவியேற்பு விழாவின் போது அச்சுறுத்தல்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, வான்வழி தளங்களின் செயல்பாட்டை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் ஜூன் 9 முதல் ஜூன் 10 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- விதிகளை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 188 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் மற்றும் வழக்குத் தொடரப்படுவார்கள்.
- நாளை வாராந்திர காவலர் மாறுதல் விழாவை ரத்து செய்வதாக ராஷ்டிரபதி பவன் அறிவித்துள்ளது.
- டெல்லியில் நாளை பாரா கிளைடர்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், ட்ரோன்கள், பாரா மோட்டார்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும். ஓட்டல்களில் தங்கியுள்ளோரின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
- பதவியேற்பு விழா நடைபெறும் போது மாநில எல்லை சீல் வைக்கப்படும். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த தடை உத்தரவு அடுத்த இரண்டு நாட்கள் அமலில் இருக்கும்.