“ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்!” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு
நாட்டில் விரைவில் மிகப்பெரிய புயல் வீசப்போகிறது. இந்த புயலின் போது ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார் என்று கோவையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்த ராகுல் காந்தி கூறினார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 7 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர முக்கிய தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக பிரசார களத்தில் அனல் பறக்கிறது.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு மிகவும் பிடிகிறது. தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. தற்போது மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானியின் அரசு தான் நடக்கிறது.
நாட்டில் விரைவில் மிகப்பெரிய புயல் வீசப்போகிறது. இந்த புயலின் மூலம் ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார். நரேந்திர மோடி சுத்தமான அரசியல் செய்வதாக சொல்கிறார். இதைத்தான் அண்ணன் மு.க ஸ்டாலின் சொல்லியிருக்கிறார், பிரதமர் மோடி சலவை மிஷின் வைத்திருக்கிறார் என்று. மோடி எதையுமே உறுப்படியாக செய்தது இல்லை. வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக நீட் தேர்வு இருக்கிறது என்பது தெரியும். எங்களுடைய புதிய திட்டம் என்பது, உங்களுக்கு நீட் வேண்டுமா? இல்லை வேண்டாமா? என்பதை உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுவோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை கட்டாயமாக நாங்கள் தருவோம். சட்டரீதியாக அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிச்சயமாக தருவோம். மோடி அவர்கள் 16 லட்சம் கோடி கடன்களை தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார். மோடி பெரிய பணக்காரர்களின் பணத்திற்கு நிவாரணம் தந்தார். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு நிவாரணம் தருவோம். அடுத்த தலைமுறையினர் போராடும் முன்பு அவரது தேவைகள் நிறைவேற்றப்படும்.
எங்கள் ஆட்சி அமைந்ததும், வரலாற்று சிறப்பு மிக்க எல்லாருடைய மனதிலும் நிற்கக்கூடிய சட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு பெண்ணுக்கு மாதம் 8,500 என்ற வீதம் ஆண்டுக்கு நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் தருவோம். அந்த குடும்பம் வறுமை கோட்டை தாண்டி உயரும் வரை நாங்கள் வழங்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.