“ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்” - நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு!
“ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார். அவரையும் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை காண அழைக்கலாம்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொழுது எனக்கு பேசுவதற்கு பேச்சு வரவில்லை. இதனை பார்க்கும் பொழுது நான் கண் கலங்கினேன். பல்வேறு மனித உருவம் அருகில் கருணாநிதி இருப்பது போல் அவருடைய புகைப்படம். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. என்னை அன்பாக பார்த்த ஒரு மனிதன் அவர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் எவ்வளவு பேர் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று விட்டது. இனிமேல் நாங்கள் தமிழ்நாட்டைப் பற்றி கவலை பட மாட்டோம்.
பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடி செய்துவிட்டார். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மாதான் இருப்பார். அவரையும் இந்த கண்காட்சியை காண அழைக்கலாம்” என கூறினார்.