“மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய மோடி அடிபணிந்துள்ளார்” - சாதி வாரி கணக்கெடுப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஏப்.30) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்தாண்டு நடத்தவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, சிபிஐ (எம்), உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றன.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாதி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்கு வரவேற்றார். இருப்பினும் அதற்கான குறிப்பிட்ட கால அளவை மத்திய அரசு கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் “மிகவும் அவசியமான சாதி வாரி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்தியஅரசு கடைசியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
ஆனால், முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடிவடையும்?. தற்செயலாக இல்லாமல், பீகார் தேர்தலில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காகவே உள்ளது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதன்முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழ்நாடு. பிரதமரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், கடிதங்கள் மூலமாகவும் இதுகுறித்து வலியுறுத்தி வந்தோம். இது தமிழ்நாடு அரசு மற்றும் திமுகவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. INDIA கூட்டணியின் சமூகநீதிப் பயணத்தில் இது மற்றுமொரு வெற்றி”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.