ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி | மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு!
இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.
இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாட்கள் பயணமாக பிரதமா் மோடி ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாஸ்கோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் வரவேற்றார். அங்கிருந்து தி கார்ல்டன் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு இசைக் கருவிகள் இசைக்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதர அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
இதையும் படியுங்கள் : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு! தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷியாவுக்கு செல்வதை உலக நாடுகள் அனைத்துமே மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷியா கூறி வருகிறது.
ரஷியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரியா செல்லவிருக்கிறார் பிரதமர், அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டா் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெகமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளார். தனது பயணத்தின்போது, ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறார்.
VIDEO | PM Modi receives a ceremonial welcome on his arrival in Moscow.
(Source: Third Party) pic.twitter.com/MtjyaO7Aop
— Press Trust of India (@PTI_News) July 8, 2024