”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” - ராகுல் காந்தி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் டிரம்ப் ரஷியவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவின் பொருட்ளுக்கு அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த வரி உயர்வு ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் டிரம்ப், அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வரி உயர்த்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”இந்தியர்களே, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாததற்குக் காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான் .மோடி, ஏஏ மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலால் தான் பிரதமர் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. பிரதமர் மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன”
என்று தெரிவித்துள்ளார்.