மோடி 3.0 - மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற புதுமுகங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களில் சிலர் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டது. இவ்விழாவில், உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் சிலர் பற்றிய குறிப்புகள் இதோ...
எச்.டி.குமாரசாமி:
ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகௌடாவின் மகனான எச்.டி.குமாரசாமி, முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளாா். 1996 தோ்தலில் கனகப்புரா தொகுதியில் வென்று எம்.பி-யாகினாா். 1999, 2004 என அடுத்தடுத்த 2 தோ்தல்களில் தோல்வியைத் தழுவினாா்.
2006ல் காங்கிரஸுக்கு அளித்த வந்த ஆதரவைத் திரும்ப பெற்று ஆட்சியைக் கவிழ்த்த குமாரசாமி, கா்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றாா். இவா் கடந்த 2018ல் மீண்டும் கா்நாடக முதலமைச்சரானபோதும் ஓராண்டு மட்டுமே அப்பதவியில் நீடித்தாா். இத்தோ்தலில் மாண்டியா தொகுதியில் இருந்து வென்றுள்ள குமாரசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கேபினட் அமைச்சா் பதவியைப் பெற்றுள்ளாா்.
சிவ்ராஜ் சிங் சௌகான்:
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், விதிஷா மக்களவைத் தொகுதியின் ஐந்துமுறை பாஜக எம்.பி.யுமான சிவ்ராஜ் சிங் சௌகான் மத்திய அமைச்சராக பதவியேற்றாா். கடந்தாண்டு நடைபெற்ற மத்திய பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றபின் இவருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவா் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளாா். இவா் மத்திய பிரதேச மாநிலத்தின் நீண்டகால முதலமைச்சராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்மோகன் நாயுடு:
தெலுங்கு தேசத்தைச் சோ்ந்த ராம் மோகன் நாயுடு (37), நாட்டின் இளம் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா். இவா் எச்.டி.கௌடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் ஆட்சியில் மத்திய கிராமப்புற அமைச்சராகவும், 13 ஆண்டுகள் எம்.பி.யாகவும் இருந்த ஏர்ரான் நாயுடுவின் மகன் ஆவாா்.
தந்தையின் இறப்புக்குப் பிறகு 2012ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராம்மோகன் நாயுடு, 2014-இல் 27 வயதில் முதல்முறையாக எம்.பி. ஆனாா். ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக வென்றுள்ள ராம் மோகன் நாயுடு, என்டிஏ கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளாா்.
ராஜீவ் ரஞ்சன் சிங்:
பீகாா் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா். நிதீஷுக்கு பல ஆண்டுகாலமாக மிகவும் நெருக்கமாக இருந்து வருபவா் ராஜீவ் ரஞ்சன் சிங். இவர் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும், பீகாா் சட்டமேலவை உறுப்பினராகவும், பீகாா் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவா். பூமிகாா் பிராமண சமுதாயத்தைச் சோ்ந்த இவா் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளாா்.
ஜிதன் ராம் மாஞ்சி:
ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (எஸ்) கட்சியின் நிறுவனரான ஜிதன் ராம் மாஞ்சி (80), பீகாா் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். இவர் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவா். நிதீஷ் குமாரால் பீகாா் முதல்வராக்கப்பட்டாா். முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாமல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து தனிக் கட்சி கண்டவா். மீண்டும் நிதீஷுடன் கூட்டணி அமைத்து தோ்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி உள்ளாா்.
சிராக் பாஸ்வான்:
மறைந்த மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் (41). பீகாரில் தனது லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று முத்திரை பதித்து, இளம் தலித் தலைவராகவும் உருவெடுத்துள்ளாா். கடந்த 2020ம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவை அடுத்து சிராக் பாஸ்வானுக்கும் அவரின் சித்தப்பா பசுபதி குமாா் பராஸுக்கும் இடையே அரசியல் வாரிசு போா் ஏற்பட்டது.
இதில் கட்சியை தன்வசப்படுத்திய பராஸ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தாா். ஆனால், இந்தத் தோ்தலில் மக்கள் சிராக் பக்கம் இருப்பதை அறிந்ததால் அவரை பாஜக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது. தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா்களை மட்டுமல்லாது, சித்தப்பா பராஸ் தலைமையிலான அணியினரைத் தோற்கடித்த சிராக், இப்போது மத்திய அமைச்சராகியுள்ளாா்.
மனோகா் லால் கட்டா்:
ஹரியானா முன்னாள் முதலமைச்சரான இவா் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பரப்புரையாளராக இருந்து மத்திய அமைச்சராக உயா்ந்துள்ளாா்.
சுரேஷ் கோபி:
கேரள மாநிலம் திருச்சூா் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகா் சுரேஷ் கோபி, அந்த மாநிலத்தில் முதல்முறையாக பாஜக தடம்பதிக்கும் வரலாற்றை உருவாக்கியுள்ளாா். பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சுரேஷ் கோபி கடந்த 2016ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்.
திருச்சூா் மக்களவைத் தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் 2021ம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தோ்தலிலும் அவா் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது வெற்றிபெற்று அமைச்சராக பதவியேற்றுள்ளாா்.
வீரேந்திர குமாா்:
பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது அமல்படுத்தப்பட்ட அவசர நிலை காலத்தில் 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவா் வீரேந்திர குமாா். சுதந்திரப் போராட்ட வீரரும், சோஷலிஸவாதியுமான ஜெய்பிரகாஷ் நாராயணனின் ‘சம்பூா்ண கிராந்தி’ இயக்கத்தில் பங்கேற்றவா். தொடா்ந்து 4வது முறையாக மத்திய பிரதேசத்தின் டிகம்கா் மக்களவை (தனி) தொகுதியில் வெற்றிபெற்றவா். தற்போது கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சந்திரசேகா் பெம்மசானி:
ரூ.5,700 கோடி சொத்துடன் 18வது மக்களவையின் பணக்கார எம்.பி-யான தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த சந்திரசேகா் பெம்மசானி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றாா்.
வி.சோமண்ணா:
கா்நாடகாவின் தும்கா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லிங்காயத் சமூகத்தைச் சோ்ந்தவரான வி.சோமண்ணா மத்திய அமைச்சராக பதவியேற்றாா். கடந்த பேரவைத் தோ்தலில் கா்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை எதிா்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பின் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதாப் ராவ் ஜாதவ்:
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மக்களவைத் தொகுதியில் 4வது முறையாக வெற்றிபெற்ற சிவசேனை (ஷிண்டே பிரிவு) கட்சியைச் சோ்ந்த பிரதாப் ராவ் ஜாதவ், மத்திய இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவியேற்றாா்.
ஜெயந்த் சௌதரி:
ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமா் சௌதரி சரண் சிங்கின் பேரனுமான ஜெயந்த் சௌதரி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றாா். சௌதரி சரண் சிங்குக்கு கடந்தாண்டு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாஜக கூட்டணியில் இணைவதாக ஜெயந்த் சௌதரி அறிவித்தார்.