மாணவர்களுக்கு கனவு பட்டங்கள் வழங்கும் முன்மாதிரி அரசு பள்ளி - பெற்றோர்கள் நெகிழ்ச்சி!
மாணவர்களின் ஆசையையும், பெற்றோர்களின் ஆசையையும் கனவு பட்டங்களாக வழங்கியுள்ளது ஒரு அரசு பள்ளி. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கனவு காணுங்கள்... ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். காணும் கனவுகளை வாழ்க்கையாக மாற்ற பள்ளி பருவத்தில் விதைக்கும் விதைகள் தான்
பின்னாளில் மரமாகி கனியாகி யாவருக்கும் பயன் தருவதாக மாறும்.
அந்த வகையில் என் கனவு, என் எதிர்காலம், என்று பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பற்றி பெற்றோர்களிடம் ஒரு கடிதமே எழுதி வாங்கி இருக்கிறது, கரூர் மாவட்டம் கா.பரமத்தி அடுத்த தொட்டியபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
இப்பள்ளியில் ஆரம்பத்தில் 9 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் முயற்சியால் தற்போது 93 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக மாற இன்றே அவர்களின் மனதில் பின் நாளில் என்னவாக போகிறோம் என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி..எஸ், மருத்துவர், பொறியாளர் போன்ற மாணவர்களின் ஆசைகள் பட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் பட்டங்கள் பொருந்திய பேட்ஜ்களை மாணவர்கள் தங்கள் சட்டைகளில் அணிந்துதான் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த பள்ளியில் தினமும் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு ஸ்டார் ஆப் தி கிளாஸ் என்று கார்டு வழங்கப்படுகிறது. அதில் அதிக ஸ்டார் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்டார் ஆப் தி ஸ்கூல் என்ற அவார்டும் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு இசை, நடனம், சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தது என்ன படிக்க போகிறீர்கள் என்று கேட்பது வழக்கம். ஆனால் இந்த பள்ளியில் சிறு வயதிலேயே என்னவாக போகிறோம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் விதைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள்.
பள்ளியில் படிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், நாங்கள் என்னவாக விரும்புகிறோமோ அதை இந்த பட்டத்தினால் பெற்றது போல் இருக்கிறது என்கிறார்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளங்கள் அல்ல, அவை பெருமையின் அடையாளங்கள் என்று கூறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், சிறு வயதில் குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொண்டு அதற்கு, ஏற்றவாறு கல்வி பயிற்றுவித்தால் அவர்களை சாதனையாளர்களாக மாற்றலாம் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த செயல் பொதுமக்களையும், கல்வி ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.