பன்றிக் காய்ச்சலால் 6,504 பன்றிகளை கொன்ற மிசோரம்!
மிசோரமில் பன்றிக்காய்ச்சலை தடுக்க கடந்த இரண்டு நாட்களில் 300க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலத்துறை தெரிவித்துள்ளது.
மிசோரமில் கடந்த இரண்டு நாட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்றால் மொத்தம் 160 பன்றிகள் இறந்துள்ளன. இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து இறந்த பன்றிகளின் எண்ணிக்கை 3,350ஐ தாண்டியுள்ளது. இதனையடுத்து பன்றிக் காய்ச்சலை தடுக்க நேற்று மற்றும் இன்று மட்டும் 300க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலத்துறை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த வருடத்தில் தற்போதுவரை மொத்தமாக 6,504 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐச்வால், சாம்பே, லுங்லேய், சைசுவல், காவ்சால் மற்றும் செர்ச்சிப் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள 120 கிராமங்களில் உள்ள பன்றிகள் இந்த ஆப்பிரிக்க தொற்றுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் 33,420 பன்றிகள் மற்றும் 2022-ல் 12,800 பன்றிகளும் 2023-ல் 1,040 பன்றிகளும் இந்தத் தொற்றினால் இறந்துள்ளன.
மிசோரமில் முதல் தொற்று 2021 மார்ச்சில் பதிவானது. வங்கதேச எல்லையில் உள்ள லுங்சென் கிராமத்தில் பதிவானது. அதுமுதல் ஆண்டுதோறும் தொற்று பரவல் ஒவ்வொரு முறையும் புதிதாக ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றிகள் விற்கப்படுவதை அரசு தடை செய்துள்ளது. மேலும் இறக்குமதிக்கும் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்போது மற்றும் மழைக்கு முன்பான பருவத்தில் இந்த தொற்று பரவல் இருப்பதாகவும் பன்றிகள் இழப்புக்குள்ளான 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அருகிலுள்ள மியான்மர், வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்றிகளால் இந்த தொற்று உருவாகியிருக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் பன்றி இறைச்சி பழங்குடி மற்றும் பழங்குடியினமல்லாத மக்களால் அதிகம் நுகரப்படும் பொருளாகும். கடும் தேவையால் இந்த பிராந்தியங்களில் பன்றிக் கறி ஆண்டு விற்பனை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை நடைபெறும். இந்தியாவில் அஸ்ஸாம் அதிகம் பன்றிகள் வளர்க்கும் மாநிலமாக உள்ளது.