MIvsRCB | பேட்டிங்கில் கலக்கிய பெங்களூர் அணி - மும்பை அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.07) ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பெங்களூர் அணி சார்பில் விராட் கோலி, ஃபில் சால்ட் ஆகியோர் ஒப்பனிங் செய்தனர். இதில் சால்ட் வெறும் 4 ரன்களில் டிரென்ட் போல்ட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த தேவதத் படிக்கல் தனது பங்கிற்கு 37 ரன்கள் அடித்து விக்னேஷ் புதூரிடம் ஆட்டமிழந்தார்.
ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டி வந்த விராட் கோலி 67 ரன்கள் அடித்து ஹார்டிக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். இவருக்கடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் ஹார்டிக் பாண்டியா வேகத்தில் டக் அவுட்டானார். இதனிடையே கேப்டன் பொறுப்பிற்கேற்ப ரஜத் படிதார் களத்தில் நின்று 64 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் டிரென்ட் போல்ட்டிடம் ஆட்டமிழக்க, இறுதியில் ஜிதேஷ் சர்மா 40* ரன்கள் விளாசினார். மொத்தமாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 221 ரன்கள் குவித்தது கலக்கியது . இதையடுத்து 222 என்ற இலக்கை மும்பை அணி சேஸிங் செய்ய உள்ளது.