பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்... என்ன காரணம்?
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைது செய்யப்பட்ட உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அருண்குமார் மிஸ்ரா என்பவர் ஜாமின் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் பஹால் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அருண்குமார் மிஸ்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் அருண்குமார் மிஸ்ரா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாலியல் புகாரை அளித்த நபர் அருண்குமார் மிஸ்ராவுடன் திருமண பந்தம் அல்லாத உறவில் இருந்ததாகவும், பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று வந்ததும், ஒத்தமனதுடன் தான் இருவரும் உறவில் இருந்ததாகவும், அருண்குமார் மிஸ்ரா ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தே அந்தப் பெண் இவருடன் பந்தம் வைத்திருந்தார். ஆனால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்துள்ளது பொய்யானது.
இருவருக்குமான உறவு முறிந்த நிலையில் தான் அருண்குமார் மிஸ்ரா மீது அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை பொருத்தவரை இருவருமே ஒத்த மனதுடன் திருமணம் ஆகாத பந்தத்தில் இருந்துள்ளனர்.
எனவே இது பாலியல் கொடுமை குற்றம் அல்ல என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புகார் அளித்த பெண் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டுள்ள அருண்குமார் மிஸ்ரா ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார். மேலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். அதனால் இந்த வழக்கில் அருண்குமார் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்பாக நீதிபதி கிருஷ்ணன் பஹல்,
சம்பந்தப்பட்ட இருவரும் முதிர்ச்சியடைந்தவர்கள். அந்த வகையில் ஏற்கனவே அருண்குமார் மிஸ்ராவுக்கு திருமணமான விஷயம் தெரிந்தும், அவருடன் அப்பெண் உறவில் இருந்து உள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் ஒன்றாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது சூழ்நிலை காரணமாக பிரிந்த பின்பு அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
தனிப்பட்ட மோதல்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான முரண்பாடுகள், குறிப்பாக முறிவுற்ற நெருக்கமான உறவுகளுக்கு பின்னர் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் தண்டனை சட்டங்கள் தவறாக பயன்படுவது மூலம், குற்றவியல் சாயல் கொடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
எனவே, சமூக ரீதியாகவோ, நெறிமுறைகள் ரீதியாகவோ கேள்விக்குரியான எல்லா நடவடிக்கைகளுக்கும் சட்டம் தலையிட்டு உத்தரவாதம் அளிக்காது என தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட நேரமும் சூழ்நிலையும், நீதிக்கான உண்மையான தேடலை விட பழிவாங்கும் நோக்கத்தையே காட்டுகின்றன என தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட அருண்குமார் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.