சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..
சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
“உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான வெப் போர்ட்டல் இந்த மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு அரசு நிதி உதவி வழங்குவதற்கு திருத்தி அமைக்கப்பட்ட வழிமுறைகளும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
வழிபாட்டு தளங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டு தலங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும் பல இடர்பாடுகளை கலைந்து ஒரே நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும். இதற்காக உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்களுக்கான மானிய தொகையை எந்தவித தங்கு தடையும் இன்றி விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக உரிய இணையவழி முகப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயன்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். பள்ளிக்கல்வித்துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.
சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்தல், உரிமங்களை புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களை பெறுவதற்கான நடைமுறைகள் ஆகிய எளிமைப்படுத்தப்படும். இதற்கான பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும். இப்போது நான் குறிப்பிட்ட விவரங்களில் இடம்பெறாத உங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் மீதும் அரசு உரிய கவனம் செலுத்தி அவற்றிற்கும் விரைவில் தீர்வு காணப்படும்" என்று கூறினார்.