இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!
இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போரின் எதிரொலியாக அமெரிக்கா, ஐ.நா. ஆகியவை எவ்வளவு தடை விதித்தாலும் ரஷியா அதனை கண்டுகொள்ளவில்லை. ரஷியாவுக்கு உதவும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் முக்கிய கருவிகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கியதற்காக 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில், 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.
சீனா, சுவிட்சர்லாந்து, யுஏஇ, கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தத் தடையை எதிர்கொண்டுள்ளன. தடைக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள் ராணுவம் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தடை குறித்து அறிந்துள்ளோம். தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்திய சட்டத்தை மீறவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.