இறைசொத்துகளை பாதுகாப்பது திமுக ஆட்சி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு
களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியதில் இருந்து இல்லாத பல முன்னேற்றங்கள்
இப்போது கண்டுள்ளது.
இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் 1818 ஆம் ஆண்டு திருக்கோயில் அன்றாட விசேஷங்களுக்கு கொடுக்கும் பொருட்கள் தவறான வழியில் போவதாக வந்த புகார் அடுத்து தொடங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள் கோயில் பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்ற புகாருக்கு பின் தான் இந்த துறை உருவாக்கப்பட்டது.
திமுக ஆட்சி வந்ததும் அனைத்து கோயில்களிலும் உள்ள குறைகளை பதிவு செய்ய சொல்லி, அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சி.சி.டி.வி பொறுத்தப்பட்டு குறைகள் இருந்தால் சரி செய்யப்பட்டு வருகின்றன .
இதையும் படியுங்கள்:நான் கைது செய்யப்படவில்லை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் -மன்சூர் அலிகான்!
மேலும், திமுக ஆட்சி ஏற்பட்ட பின் 5000 கோடி ரூபாய் மேல் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, சான்றோர்கள் சார்ந்த திருப்பணிகள் பணியும் நடக்கிறது. 200 உலோக சிலைகள், 100 கற் சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன. அது யார் கைக்கு போகிறது என்று தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மத்திய அரசு நகர்த்தும் காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி திமுக உடையது என்பது தான்.
மேலும், இதுவரை செய்யப்படாத பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சி அமைந்த பின் தான் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்துள்ளது. வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரி அல்ல.
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கம் வராது என்ற நம்பிக்கை இழந்த காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பரப்புகின்றனர்.
8001 திருக்கோயில்களுக்கு மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் எல்லாம் 1000 கோயில்களுக்கு தான் கிடைக்கும். தெய்வங்களையும் தெய்வத்திற்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து, திருப்பணிகளை
வழங்கிய ஆட்சி இறை சொத்தை களவாடும் ஆட்சி இது இல்லை, பாதுகாக்கும் ஆட்சி இது.
எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்க
இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது. அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிக மானியம் வழங்கிய ஆட்சி இது தான். மேலும், கோயிலில் காணாமல் போன சிலைகளை மீட்பது ஒருபுறம் இருந்தாலும் மேலும் களவு போகாமல் இருக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை மகா தீப நிகழ்ச்சியில் கடந்த முறை சிறு குறை கூட ஏற்படவில்லை. இந்த முறையும் சிறப்பாக செயல்பட திட்டமிடுவதற்காக காவல் துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை என அனைத்தையும் ஒன்றினைத்து கூட்டம் நடத்த
முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன் படி கூட்டம் நடத்தினோம்.
இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது, விடுமுறை நாட்களும்
உள்ளதால் அதிக பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. 14 ஆயிரம் காவலர்கள் திருவிழாவில் பயன்படுத்த உள்ளோம். 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் , 60 மருத்துவ முகாம்கள், 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் அரசு சிறப்பு கட்டணம் 50 என இருந்தது பௌர்ணமி தினங்களில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து உடனடியாக செயல்படுத்தும் ஆட்சி இது. இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து பதவிகளிலும் இருப்பவர்கள் முழுவதும்
இந்துக்கள் தான். இந்துக்கள் அல்லாதவர்கள் எங்கும் நியமிக்கப்படவில்லை. யாரால்
திருக்கோயிலுக்கு நன்மை நடக்கிறதோ அவர் தான் அறங்காவலராக உள்ளனர்.
38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. 5000-க்கும் மேற்பட்ட கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருக்கோயில்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தினால் இந்து சமய அறநிலைத்துறை அமைதியாக இருக்காது.
உயர்நீதிமன்ற உத்தரவு படி சிதம்பர நடராஜர் கோயிலில் அறநிலை துறை அதிகாரிகள்
மூன்று பேரும் தொல்லியல் துறை அதிகாரிகள் இரண்டு பேரும் என ஐந்து பேர் கொண்ட குழு விரைவு ஆய்வு செய்ய உள்ளது என்றார்.