டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : வெளியானது “டிமாண்டி காலணி 2” படத்தின் டிரைலர்!
அதன்படி நிவாரணத் தொகை வழங்கும் பணியினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகில் பயனாளிகளுக்கு ரூ.6000 நிவாரணத் தொகையினை வழங்கி இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது; "நிவாரணத் தொகை டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். டோக்கன் பெறாதவர்களுக்கு உதவ ரேஷன் கடை அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.