கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி - தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
கன்னியாகுமரியிலிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த, திமுக இளைஞரணி மாநில செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குட்டிக்கதை ஒன்றை தொண்டர்களுக்கு கூறினார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விருப்பத்தின் பேரில், கட்சியின் 2 - ஆவது இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி சேலத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு இளைஞர் அணி மாநில செயலாளரும்,விளையாட்டுத்
துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இருந்து இருசக்கர வாகன பரப்புரை பேரணியை தொடங்கி வைத்தார்.
அண்ணா மண்டலம், பெரியார் மண்டலம், கலைஞர் மண்டலம் மற்றும் வள்ளுவர் மண்டலம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 234 தொகுதிகளையும் சென்றடையும் விதமாக 8,647 கிலோமீட்டர், 543 பிரச்சார மையங்கள் என 13 நாட்கள் மேற்கொள்ளும் இந்த வாகன பரப்புரை பயணம் நிறைவாக மாநாடு நடைப்பெறும் சேலம் சென்றடைகிறது. வள்ளுவர் மண்டலமான கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பரப்புரை பயணத்தில் 188 வாகனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சேலத்தில் நடைபெற உள்ளது மாநில உரிமை மீட்பு மாநாடு. குறிப்பாக கல்வி உரிமையை நாம் மத்திய அரசிடம் இழந்து விட்டோம். நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எனினும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை . எனவே மத்திய அரசை வலியுறுத்தி இதுவரை 50 லட்சம் கடிதம் போன்ற தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகம் இதுவரை மத்திய அரசுக்கு அளித்த வரி தொகை ரூ.25,000 கோடி. ஆனால் மத்திய அரசு திருப்பி அளித்த தொகை வெறும் ரூ.2000 கோடி மட்டுமே. இதையெல்லாம் வாகன பரப்புரை மூலமாக பொது மக்களுக்கு விளக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், குட்டி கதை ஒன்றை கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கதை:
சுத்தியல், சாவி இதற்கு மத்தியில் பூட்டு. இந்த பூட்டை சாவியை போட்டு திறப்பதற்கு முன்பு சுத்தியலால் தலையில் அடித்து, அடித்து திறக்க முடியாமல் சுத்தியல் திணறுகிறது.
இதனை அடுத்து சாவி அந்த பூட்டை எளிதாக திறக்கிறது. அப்போது சாவியை பார்த்து
சுத்தியல் கேட்கிறது எப்படி இவ்வளவு சாதுரியமாக திறந்தாய் என்று. அதற்கு சாவி செல்கிறது, வெயிட்டா இருக்கும் ஆணவத்தால் தலையில் அடித்தால், பூட்டு திறக்காது.
இதயத்தில் சாவியை நுழைத்தால், அந்த அன்பில் பூட்டு திறந்து விடும். இந்நிலையில், அந்த பூட்டு தான் தமிழகம், அந்த சாவி தான் திமுக, அந்த தலைக்கணம் கொண்டதுதான் ஒன்றிய அரசு என அங்கு உள்ளவர்களுக்கு விளக்கிக் கூறினார்.