சென்னையில் 100 புதிய தாழ்தள பேருந்துகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னையில்100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது.
எனினும், தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் தாழ்தள பேருந்து சேவையை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர் பாபு,போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 66.16 கோடி மதிப்பீட்டில் தாழ்தள பேருந்துகள் 58, சாதாரண பேருந்துகள் 30 , புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் 12 என ஒட்டுமொத்தமாக 100 பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தாழ்தளப் பேருந்துகள் தி.நகர் - திருப்போரூர் , பாரிமுனை - கோவளம் , கிளாம்பாக்கம் - கோயம்பேடு, தாம்பரம் - ஆவடி , தாம்பரம் - மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
தாழ்தள பேருந்துகளில் உள்ள சிறப்பம்சங்கள்;
- மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்க வசதியாக தளம் 400 மி.மீ
உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. - மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும்
வீல்சேருடன் அமர்ந்து பயணிக்க தனி இட வசதியும் உள்ளது. - பேருந்து நிறுத்துத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி
மற்றும் LED DISPLAY BOARD பொருத்தப்பட்டுள்ளது. - ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி இயக்க rear view camera உள்ளது.
- என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால்
அணைப்பதற்கு fire safety nozzle engine மேல் பகுதியில் உள்ளது.