அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் #SenthilBalaji!
செந்தில் பாலாஜி இன்று (செப். 27) இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று (செப். 26) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, இரவு 7 மணி அளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர். செந்தில் பாலாஜி இன்று (செப். 27) இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.