“மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது” - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
“தமிழ்நாடு அரசு முன்னெடுத்த முயற்சிகளால் தான் வணிக வரிகளின் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக வளர்ச்சி என்பது 14 சதவிகிதமாக வந்திருப்பதற்கு நாம் எடுத்த முயற்சிகள் தான் காரணம். பொதுவாக நிதிநிலைமையை கட்டுக்குள் வைக்க Fund Tracking system செய்யப்பட்டு வருகிறது. ஒரு திட்டத்திற்கு எவ்வளவு நிதி எப்போது வெளியிட வேண்டும் என்ற அளவிற்கு நுட்பமாக நிதிமேலாண்மை செய்து வருவதால், சிறப்பாகவே உள்ளது.
CMRL திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அந்த திட்டத்திற்காக எந்த நிதியும் வரவில்லை. பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை தொடர்ச்சியாக வலியுறுத்திய பிறகு திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்கள். நிதி ஒதுக்கப்படாத வரை, தமிழ்நாடு அரசு அதன் சொந்த நிதியில் இருந்து 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தியது. TANGEDCO நிறுவனத்திற்கு LOSS FUNDING மட்டுமே மாநில அரசின் நிதியில் இருந்து 50 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இயற்கை பேரிடர்களின் போது கொடுக்கப்பட்ட பணம் மாநில அரசின் நிதி. பேரிடர் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி எதுவும் வரவில்லை. 776 கோடி ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் மாநில அரசிற்கு வழக்கமாக கொடுக்கப்படும் பேரிடர் நிதி.
பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதியை மாநில அரசு தான் கொடுத்துள்ளது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துற்கு ஏறத்தாழ வரவேண்டிய 2000 ஆயிரம் கோடி ரூபாய் வரவில்லை. மத்திய அரசு அதற்கான நிதியை விடுவிக்கவில்லை. அதேபோல், பிரதர் வீடு கட்டும் திட்டத்தில் கூட , மாநில அரசு தான் அதிகமான நிதியை கொடுக்கின்றது.
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து கூடுதல் தொகை கொடுக்கப்படுகிறது. நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், காலை உணவு, மகளிர் உரிமைத்தொகை என அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசின் சொந்த நிதி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான உரிய நிதியை, நமக்கு வரக்கூடிய வருவாய்களில் இருந்து திட்டமிடும் காரணத்தினால் தான், பட்ஜெட்டில் எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறோமோ, அது எல்லா துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிதிமேலாண்மை தொடர்பாக, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி தலைவர் பொதுவெளியிலோ, சட்டமன்றத்திலோ சொல்வதை இனிமேலாவது தவிர்க்க வேண்டும். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கீடு என்பது கொடுக்க வேண்டும். ஆனால் கொடுப்பது இல்லை. இந்த வருடம் ஜி.எஸ்.டி தொகை வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி நிதிப்பகிர்வை பொறுத்தவரை, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மொத்த நிதிப்பகிர்வில் 40% அளவிற்கு வழங்கியுள்ளார்கள்.
குறிப்பாக உத்தரபிரதேசத்திற்கு மட்டும் 31 ஆயிரத்து 39 கோடி ரூபாய் நிதி சென்றுள்ளது. பீகாருக்கு 17 ஆயிரத்து 403 கோடி ரூபாயும் , மத்தியபிரதேசத்திற்கு 13 ஆயிரத்து 582 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்கள். ஆனால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு மொத்த நிதிப்பகிர்வில் 15% மட்டுமே கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 4 மாநிலங்களுக்கும் சேர்த்து 27 ஆயிரத்து 310 கோடி ரூபாய் தான் வந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மட்டும் வெறும் 7 ஆயிரத்து 56 கோடி ரூபாய் தான் ஒன்றிய அரசு கொடுத்துள்ளர்கள். தமிழ்நாடு அரசு பல்வேறு பேரிடர் பாதிப்பிற்காக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஏற்கனவே கூறியதுபடி 776 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு 2010 ஆம் ஆண்டில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான நிதியை 14 மடங்கு உயர்த்தி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். அதுவே பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிதி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே.
அதையும் 8 வருடமாக மத்திய அரசு உயர்த்தி தரவில்லை. இந்த திட்டத்தில் , பயனாளிகளுக்கு ரூ.2 லட்சுத்து 82 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசின் பங்கு மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய். பிரத மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கூட மாநில அரசு தான் 60% நிதியை கொடுக்கிறது.
கடும் நிதிச்சுமை இருந்தாலும் அதற்கென நிதி ஒதுக்கி இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருக்கும் மத்திய அரசால், தமிழ்நாட்டின் நிதி ஆதாராங்களில் பாதிப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், முதலமைச்சர் வழிகாட்டுதலால் நிதிமேலாண்மை சிறப்பாகவே கையாளப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதைவிடுத்து தவறான தகவல்களை பரப்ப கூடாது. மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில்பாதை திட்டம் குறித்து ஒரு தவறான தகவலை பரப்ப முயன்றார்கள். ஆனால் உண்மை நிலையை நாம் விளக்கியவுடன், செய்தியாளர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை கொடுத்தார்கள்.
ஒரு மாநிலத்தில் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பகிர்வினை அளிக்க வேண்டும், அந்த மாநிலங்களின் வளர்ச்சியை முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை. வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சி நன்றாக இருந்தால்தான், உதவி தேவைப்படும் மாநிலங்களுக்கும் நிதியை கொடுக்க முடியும். மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை வழங்குவதோடு, மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும்.
ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவது என்பது அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் மற்ற பெரிய நகரகங்களில் உள்ள விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் மிகச்சிறியதாக இருக்கிறது. டெல்லி விமான நிலையம் ஏறத்தாழ 51 ஆயிரம் ஏக்கரிலும் , மும்மையில் 1150 ஏக்கர் , ஹைதராபாத்தில் 5500 ஏக்கர், பெங்களூர் 4000 ஏக்கரிலும் விமான நிலையங்கள் அமைந்துள்ளது.
ஆனால் சென்னை விமான நிலையம் 1000 ஏக்கரில் தான் அமைந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் வருடத்திற்கு 2 கோடி நபர்கள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில வருடங்களில் இது 3 கோடியை தாண்டும். அடுத்த 10 வருடங்களில் 8 கோடி பயனாளிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே குடியிருப்புகள் அதிகமாகிவிட்டதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. எதிர்காலத்தையும் மனதில் வைத்தே திமுக ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், மாநிலத்தில் வளர்ச்சி என அனைத்து அந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தே அமையும்.
டைடல் பார்க் போன்றவை எதிர்கால நோக்குடன் அமைக்கப்பட்டதால் தான் தகவல் தொழில்நுட்பத்தில் வளர முடிந்தது. அதுபோல தான் பரந்தூர் விமான நிலையமும். பொருளாதார புரட்சிக்கு அடிகோலாக பரந்தூர் விமான நிலையம் எதிர்காலத்தில் அமைந்திருக்கும். பயணிகளின் வசதி என்பதை தாண்டி, தொழில் வளர்சிக்கும் இந்த விமான நிலையம் தேவையானதாக இருக்கின்றது.
பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுவருகிறது. அங்கு இருக்கும் மக்கள் பாதிக்காத வகையில் மறு குடிஅமர்வு செய்வதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார். பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில்கொள்ளும். ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் நம்முடைய தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறுவதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும். நம்முடைய அரசு விவேகமாக இருப்பதால் தான் இவ்வளவு நிதி நெருக்கடியிலும் கடனை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நிதிக்குழு பரிந்துரைத்த கடன் அளவை விட குறைவாக தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்குகிறது”