Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!

03:53 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Advertisement

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும்,  உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜன. 8-ம் தேதி தள்ளி வைத்தது.

அதன்படி நேற்று (ஜன. 8) இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை இன்று (ஜன.9) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வருகிற 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், அதற்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
appealhealth issueMadras High CourtMinisterNews7Tamilnews7TamilUpdatesPetitionSenthil balaji
Advertisement
Next Article