தடைகள் தாண்டி 'ComeBack' கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி - முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
தடைகளை தகர்த்து, கோவைக்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோயம்பத்தூர் மாவட்டம், காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட இருக்கும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ. வேலு, தலைமைச்செயலாளர் முருகானந்தம் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மீண்டும் எகிறிய #GoldRate | இன்றைய நிலவரம் என்ன?
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
" கோவை மாவட்டத்தில் மூன்று முறை நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கியும் , பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை அறித்துள்ளேன். 2023 தொடக்கத்தில் அந்த திட்டங்கள் நிலை குறித்து மண்டலங்கள் வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தியுள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அமைச்சரவை கூட்டம் நடத்தி கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு அறிவித்த அறிவிப்பு நிலை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அதன் பின்னர், தமிழ்நாட்டிற்கு முதலீட்டுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க பயணம் மேற்கொண்டேன். அமெரிக்க பயணம் முடிந்தவுடன் அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை நடத்தினேன். மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதில் முதல் மாவட்டமாக நான் தேர்ந்தெடுத்தது கோவை மாவட்டம். கோவை மாவட்டத்திற்கு நேற்று வந்ததிலிருத்து நடக்கூடிய பணிகளை ஆய்வு செய்திருக்கிறேன். மக்களின் கோரிக்களையும் கேட்டிருக்கிறேன்.
அதன் ஒரு பகுதியாக இன்று மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த அடிக்கல் நாட்டு விழாவை மிக சிறப்பாக செய்துள்ள கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் எ.வ. வேலு , கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சிறப்பான வேகமாக செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அதுக்குள் விரிவாக போக விரும்பவில்லை. ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி. ஆனால், அந்த தடைகளை எல்லாம் உடைத்து மீண்டு வந்திருக்கிறார், தொடர்ந்து கோவைக்காக அவர் சிறப்பாக செயல்படுவார் அது உறுதி.
கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் நினைவாக மதுரையில், மாபெரும் நூலகத்தை அமைத்தோம். அதேபோல், கோவையிலும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. சென்னையில் அண்ணா நூலகம் இருக்கிறது. மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் இருக்கிறது. கோவையில் இவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையவுள்ளது. இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்.செம்மொழி பூங்கா ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
தங்கநகை தயாரிப்பாளர்களுக்கு ரூ. 126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்துத்தரப்படும். தங்க நகை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கேட்டப்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். தங்க நகை தொழில் வளாகம் அமைப்பதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.