மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் - மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!
மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை அமலாக்கத் துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் எதிரொலி : ரூ.100 கொடுத்து ஜேசிபி, ட்ராக்டரில் பயணித்த மணலி மக்கள்..!
மேலும், அவர் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் நவம்பர் 15-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் மீண்டும் புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.