சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆக.12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அதன் பிறகான நீதிமன்றக் காவல் கடந்த அக். 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவ. 22 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் நவ.20- ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளைக்கு செல்லும் நரம்பில் வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டார்.